உலகளாவிய டிஜிட்டல் கட்டண சேவையான PayPal, இன்று(15) முதல் இலங்கையில் தனது முழுமையான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நடவடிக்கை, குறிப்பாக சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் ஒன்லைன் வணிகங்களில் ஈடுபடும் பயனர்களுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், இலங்கை பயனர்கள் இனி PayPal ஊடாக சர்வதேச கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடிவதுடன், உள்நாட்டு வங்கிகள் வழங்கிய வரவு மற்றும் கடன் அட்டைகளையும் இணைத்து பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், மூன்றாம் தரப்பு இணையத்தளங்களுக்கு நேரடியாக வங்கி அட்டை விவரங்களை வழங்காமல், கூடுதல் பாதுகாப்புடன் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை செய்யும் வசதியும் கிடைக்கவுள்ளது.
அதேவேளை, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி ஆஃப் சிலோன் மற்றும் இலங்கை வங்கி ஆகிய வங்கிகள் “இலங்கையின் பங்காளர் வங்கிகள்” என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், PayPal கணக்குகள் வழியாக நேரடியாக நிதியைப் பெறவும், மீளப்பெறவும் இலங்கை பயனர்களுக்கு வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

