கல்முனை மாநகர பொதுச் சந்தையில் விஷேட சுத்திகரிப்பு வேலைத் திட்டம்

கல்முனை மாநகரின் வர்த்தக கேந்திர மையமாக கருதப்படுகின்ற பொதுச் சந்தைத் தொகுதி விஷேட சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக அவரது அறிவுறுத்தலுக்கு அமைவாக மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர பொதுச் சந்தைத் தொகுதியின் உற்புறம், வெளிப்புறம் மற்றும் சுற்றுச் சூழல் முழுவதுமாக திண்மக் கழிவுகள் யாவும் அகற்றப்பட்டு, சீர்செய்யப்பட்டுள்ளன.

 

அத்துடன் அங்குள்ள வடிகான்களில் நீரோட்டமானது தடையின்றி சீராக செல்வதற்கு ஏற்றவாறு கழிவுகள் அகற்றப்பட்டு, சீர்செய்யப்பட்டுள்ளதுடன் மூடிகள் இல்லாத வடிகான் பகுதிகளுக்கு அவசரமாக மூடிகளை இடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கல்முனை மாநகர சபையினால் அன்றாடம் முன்னெடுக்கப்படும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாகவே இவ்விஷேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டுள்ள கல்முனை மாநகர பொதுச் சந்தைத் தொகுதியின் சுற்றுச்சூழலை தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதற்கு வியாபாரிகளும் நுகர்வோரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மேலும், பொதுப் போக்குவரத்துகளுக்கும் பாதசாரிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையூறுகளை ஏற்படுத்தாதவாறு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

அத்துடன் இச்சந்தை தொகுதியின் சுத்தம், சுகாதாரம் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சந்தை மேற்பார்வையாளர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மாநகர ஆணையாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இங்கு நிலவும் ஏனைய பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அடுத்தடுத்த நாட்களில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *