ஆளுநர் தலையீட்டில் ஐ.வி.எப் உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கையளிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட ‘பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மகப்பேறு சிறப்பு சிகிச்சை நிலையத்தில்’ பயன்பாடற்றுக் கிடந்த செயற்கை முறை கருக்கட்டல் (ஐ.வி.எப்.) சிகிச்சைக்குரிய பல மில்லியன் பெறுமதியான நவீன உபகரணங்களை, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் நேரடித் தலையீட்டின் மூலம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் இன்று(19) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இலங்கையின் அரச மருத்துவமனையொன்றில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மற்றும் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை வசதிகள் நிறுவப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் இந்த பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதோடு, செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சைக்கான அதிநவீன உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தன. எனினும், பல்வேறு காரணங்களால் அவை நீண்டகாலமாகப் பயன்பாடற்ற நிலையில் காணப்பட்டன.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஆளுநர் வேதநாயகன், இந்த உயர்தர உபகரணங்களைச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவருவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

 

இதன் பயனாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கும், வடக்கு மாகாண சபைக்கும் இடையில் விசேட ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாகவே இன்று இச்சேவை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு மருத்துவ விதிமுறைகள் மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுத் தகுதியான நான்கு பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் இவர்களுக்கான செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சைகள் இன்று முதல் முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இந்த மகத்தான கூட்டு வேலைத்திட்டமானது, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் இணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.

 

குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் பெண்நோயியல், சத்திரசிகிச்சை மற்றும் சமூக, குடும்ப மருத்துவத் துறைகளின் கல்வி மற்றும் மருத்துவ நிபுணத்துவம் இத்திட்டத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

 

மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அத்தியாவசியமான தற்காலிக மனித வளங்களை வழங்குவதற்கு, கனடா யாழ்ப்பாண மருத்துவ பீட வெளிநாட்டு பழைய மாணவர் சங்கம் தனது நிதியுதவியையும் அனுசரணைகளையும் வழங்கியுள்ளது.

 

இந்த விசேட சேவையின் அறிமுகமானது, மாகாண சுகாதாரத் துறையில் ஒரு மிகப் பெரிய மைல்கல்லாக அமைவதுடன், கருத்தரிப்பதில் சவால்களை எதிர்நோக்கும் இப்பிராந்திய தம்பதியினருக்கு முற்றிலும் இலவசமாக மேம்பட்ட சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அரியதொரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

 

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு 58 மேலதிக ஆளணிகள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *