சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவியும் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை நகர சபை அமர்வில் விமர்சித்து, அதனை தூக்கி வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரின் உப தவிசாளர் பதவியையும் நகர சபை உறுப்பினர் பதவியையும் வடமாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி கோரி, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் சாவகச்சேரி சந்தை மற்றும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
எனினும், பாடசாலைகள், வங்கிகள், அரச நிறுவனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைபோல இயங்கின. இதேவேளை, கொடிகாமம் பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

