மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இன்று (27) நடைபெற்ற பொதுமக்களின் கவனயீர்ப்புப் போராட்டம், மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பீ. பாலசிறிதரின் தலையீட்டைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
ஆலயத்தில் நிலுவையில் உள்ள கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் என இணைப்புச் செயலாளர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம், நிர்வாகத்தினருக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக 14 ஆண்டுகள் கடந்தும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆலயத்தைப் புனரமைத்து பாலஸ்தானம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பீ. பாலசிறிதர், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாணத்தின் பழைமை வாய்ந்தும் பிரசித்தி பெற்றதுமான இந்த ஆலயத்திற்கு கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படாமல் ஒரே நிர்வாகம் தொடர்வதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஆலய சேமிப்பு நிதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆலயப் பாவைகள் செயலிழந்துள்ளதுடன் சிலைகள் சேதமடைந்தும், வர்ணப்பூச்சுகள் பழுதடைந்த நிலையிலும் காணப்படுவதால் பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆலயத்திற்கு தற்காலிக நிர்வாகம் ஒன்றை நியமித்து, ஆலயப் புனரமைப்பு, பாலஸ்தானம் மற்றும் கும்பாபிஷேக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

