காசா மீது இஸ்ரேல் முன்னெடுத்த போரின் போது கொல்லப்பட்ட 105 பலஸ்தீனியர்களின் சடலங்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் பலஸ்தீன தேசியக் கொடிகளால் போர்த்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடனான இறுதி ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாக சிவில் பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த சடலங்கள் அனைத்தும் காசா நகரின் வடமேற்கில் உள்ள ஷேக் ரத்வான் அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தொடர்ச்சியான போரின் ஒரு பகுதியாக, 2023 அக்டோபர் 25 ஆம் திகதி பிற்பகலில், யர்மூக் சதுக்கப் பகுதியில் சுமார் 20 குண்டுகளை வீசி ஏழு மாடிகளைக் கொண்ட அல் தாஜ் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டதோடு மேலும் பல குடியிருப்பு கட்டடங்களும் அழிக்கப்பட்டன.
இவ்வாறு கொல்லப்பட்டு கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்து மீட்கப்பட்டுள்ள உடல்களே அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

