2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள VAT சீர்திருத்தங்கள் மூலம், திரைப்படத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த வருமானப் பகிர்வு தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படவுள்ளதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் நுழைவுச்சீட்டின் முழு விலைக்கும் VAT அறவிடுவதற்குப் பதிலாக, தயாரிப்பாளர்கள், திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெறும் வருமானப் பங்கிற்கு ஏற்ப தனித்தனியாக VAT கணக்கிடப்படும்.
2024ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் VAT நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரிப் பதிவு, வரி அறவீடு மற்றும் தயாரிப்பாளர்களுக்குச் சேர வேண்டிய வருமானத்தை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய முறையின் கீழ் ஒவ்வொரு தரப்பினரும் தனித்தனியாக VAT பதிவு செய்து, தமக்குரிய வருமானப் பங்கிற்கு ஏற்ப வரியைச் செலுத்த முடியும். இதன் மூலம் திரைப்படத் துறையில் நியாயமான வரி நடைமுறை உறுதிப்படுத்தப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

