வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 5,98,000 ஏக்கரில் சுமார் 4,32,000 ஏக்கர் வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ளதாகவும், இதில் மக்களின் நெற்செய்கை மற்றும் சிறுதானியப் பயிர்ச்செய்கைக் காணிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, மக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணிகள் மற்றும் அவர்கள் முன்னர் பயன்படுத்திய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், வனப்பகுதியை 16 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், மக்களுக்குத் தேவையான காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

