மகளைப் பார்க்கச் சென்ற 62 வயதுடைய தந்தை சடலமாக மீட்பு – இருவர் கைது!

கொழும்பில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றிய 62 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் தனது மகளுக்குப் பரிசளிப்பதற்காகக் கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஒதுக்குப் பாதையொன்றில் அவரது சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில், முச்சக்கரவண்டியில் வந்த இருவர் சடலத்தைக் கைவிட்டுச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின்போது, உயிரிழந்த நபர் இடைநடுவில் முச்சக்கரவண்டியில் ஏறிப் பயணித்துள்ளதாகவும், பம்பலப்பிட்டி பகுதியை அண்மித்தபோது அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததை சாரதி அவதானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும், அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாமல், சாரதி தனது நண்பரின் உதவியுடன் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒதுக்குப் பாதையொன்றில் கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவரிடமிருந்த 4,000 ரூபாய் பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலத்தில் பல காயங்கள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *