கடந்த 10 ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் அது இளவாலை பொலிஸ் பிரிவுக்குள் வரும் என கூறினர்.
ஆகையால் நாங்கள் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு பி.ப 3.00 மணியளவில் சென்றோம். எங்களை 6.00 மணிவரை காக்க வைத்தனர். பின்னர் முறைப்பாடும் பதிவு செய்யாமல் ஒரு வெற்றுக் கடிதாசியில் குறித்து வைத்துவிட்டு எங்களை திருப்பி அனுப்பினர்.
களவு எடுத்த நபர் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு தப்பிச்சென்றார். அந்தவகையில் அந்த துவிச்சக்கர வண்டியின் இலக்கம் யாருடைய பெயரில் பதிவில் உள்ளது என்பதை வைத்து நடவடிக்கை எடுக்துமாறு கூறினேன்.
இதன்போது இளவாலை பொலிஸார் “உனக்கு மண்டைக்குள் அறிவு இல்லையா, மூளை இல்லையா, வேறு ஆட்களின் கதையை வைத்து ஏன் கதைக்கிறாய்” என மிரட்டினார்கள்.
எமது பணம் தொலைந்தது தொடர்பாக இதுவரை முறைப்பாடு பதிவு செய்யவும் இல்லை பணத்தை கண்டுபிடித்து கொடுப்பதற்கு பொலிஸார் முயற்சிக்கவும் இல்லை என குறித்த இளைஞன் குற்றம் சாட்டினார்.
இளவாலை பொலிஸாரின் இவ்வாறான முறைகேடான செயற்பாடுகள் பல அண்மை காலமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.