யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்பட்டு, கடல் அட்டைப் பண்ணைகளுக்கு ஆதரவளிப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், சீனக் கடல் அட்டைப் பண்ணைகள் சூழலுக்குப் பாதிப்பா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யுமாறு கடந்த 2 ஆண்டுகளாக அந்த பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்தபோதும், அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என குறிப்பிட்டார்.
“கடல் வளங்கள் அழிகின்றன என்று மீனவர்கள் சுட்டிக்காட்டும் போது மௌனம் காத்த பல்கலைக்கழகம், கடந்த மாதம் கடல் அட்டையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடற்றொழில் திணைக்களங்களுடன் சேர்ந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட சிறு மீனவர்கள் அழைக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் கைகளில் உள்ள கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்ற அரசாங்கங்களின் கீழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும் செயல்படுகின்றதா?
பதவியில் இருப்பவர்கள் தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று கூறிக்கொண்டு, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றனர்” என அவர் குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு இதுவரை வெளியிடப்படவில்லை.

