ஆசிரியர் தலையங்கம் : 09
வணக்கம் என் உறவுகளே!
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவுகள் தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு நிலைப்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலைமையில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் கல்வி, பெண்களுக்கான அதிகாரம், புத்தாக்கம், அபிவிருத்தி, ஒத்துழைப்பு போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. குறிப்பாக கடல்சார் வளங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் அண்டை நாடுகளாகிய இந்தியா–இலங்கை இடையேயான கடற்றொழில் பிரச்சினை முக்கிய அச்சுறுத்தலாகவே நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்த பிரச்சினை இரு நாடுகளின் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் நேரடியாக பாதித்து வருகின்றது. இந்த விவகாரம் மீண்டும் மேல்மட்டக் கலந்துரையாடலில் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையை அளிக்கிறது.
எனினும், கலந்துரையாடல்களில் சுற்றித் திரிவதை விட, தீர்வை நோக்கும் நிலைப்பாட்டை எடுத்துச் செல்வதே இருநாடுகளின் உண்மையான அரசியல் பொறுப்பாகும்.
இரு தரப்பிலும் “பரஸ்பர முன்னேற்றம்” மற்றும் “நிலையான ஒத்துழைப்பு” பற்றி பேசப்பட்டபோதிலும், அவை நடைமுறை மட்டத்தில் பதிலில்லா கேள்விகளாகவே தங்கியுள்ளன.
1. இந்திய கடற்றொழிலாளர்களின் கடல் எல்லை அத்துமீறல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?
3. இந்திய முதலீடுகள் இலங்கையின் தன்னாட்சி மற்றும் உள்ளூர் பொருளாதார பாதுகாப்பை மதிக்கும் வகையில் இருக்குமா?
4. அபிவிருத்தி ஒப்பந்தங்கள் இலங்கை மக்களின் நலனை முன்னிலைப்படுத்துமா?
இன்று இலங்கை, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக வெளிநாட்டு ஒத்துழைப்பு அவசியமாகத் தேவைப்படுகின்றது. இந்தியாவுடன் உள்ள உறவு மூலதனத்தை மட்டுமல்ல, பிராந்திய பாதுகாப்பையும் பொருளாதார நிலைப்பாட்டையும் தீர்மானிக்கப் போகிறது. அந்த அளவுக்கு இந்த உறவு முக்கியமாக இருந்தாலும், இலங்கை தனது தேசிய நலனையும் கடல்சார் உரிமைகளையும் உறுதியாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்துள்ள புவியியல் நெருக்கம், பண்பாட்டு ஒற்றுமை மற்றும் வரலாற்றுப் பின்னணி இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக இருந்தாலும், உண்மையான நட்பு சமநீதியில் நிலைக்க வேண்டும். அண்டை நாட்டின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பது அவசியம்; என்றாலும் அந்நாட்டின் சுயமரியாதையும், அந்நாட்டின் தன்னாட்சியையும் இந்தியா மதிக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, இந்த சந்திப்பு ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், அதன் வெற்றியை தீர்மானிப்பது எதிர்பார்க்கப்படும் செயல்திட்டங்களும் தீர்வுகளுமே ஆகும்.
வாக்குறுதிகளின் காலம் கடந்துவிட்டது. இனி காலம் கேட்பது தீர்வுகளை மட்டுமே!
என்றும் அன்புடன்
ஆசிரியர்
அ.அருள் சஞ்ஜூத்

