இலங்கை வரலாற்றில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது. 

கிழக்கு மாகாணத்தில் இக்கட்சி உதயமானாலும் முதல் முதலாக அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்றது மாகாண சபைத்தேர்தல் மூலமாக வடகிழக்கிற்கு வெளியேயுள்ள மாகாணங்களில் தான்.

 

அரசியல் சூழ்நிலைக்கேற்ப தேர்தல்கள் வருகின்ற போது பெரும்பாலும் வடகிழக்கிற்கு வெளியில் தாங்கள் கூட்டணி அமைத்திருக்கும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தங்களுக்குச் சாதகமான பிரதேசங்களில் போட்டியிட்டு வந்தார்கள்.

 

அவ்வப்போது வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் தேவையின் நிமித்தம் தனித்தும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கட்சி என்பதனால் நாடு தழுவியதாக ஆதரவாளர்கள் இருக்கத்தக்கதாக அதற்கேற்ப முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலும் அந்தந்தப்பிரதேசங்களுக்கான பிரதிநிதிகளுக்கும் இடம்கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்தச்சின்னத்தில் போட்டியிட்டமையினால் தேசியப்பட்டியலினூடாகவும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தமை ஒரு உற்சாகத்தை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

தற்போது நாட்டில் இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டாலும், ஆட்சியாளர்கள் மீது மக்களின் நம்பிக்கை தளர்ந்து கொண்டு செல்வதை ஆட்சியாளர்களின் சில செயற்பாடுகள் காரணமாக அமைந்திருக்கிறது என்பதைக்கான முடிகின்றது.

 

இச்சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு மக்களின் பலமான குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் உடபட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது.

 

இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வரும் சூழலில் தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நாடு எதிர்நோக்கியிருக்கிறது.

 

தற்போதைய உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் முறையில் பெரும்பாலும் சபைகளை தனிக்கட்சி ஆட்சியமைப்பது கடினமாக இருப்பதால் கூட்டாட்சி முறையே அதிகம் சாத்தியப்படுவதை கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் கண்டுகொண்டோம்.

 

தேசிய அரசியலில் தேசிய கட்சிகளோடு கூட்டாக இருந்தாலும் குறித்த தேர்தலில் தனித்துக்கேட்கும் போது கட்சிகள் ஆசனங்களைப்பெற்று ஆட்சியில் பங்காளர்களாகும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் இம்முறை பல கட்சிகள் தனித்து தங்களின் சொந்தச் சின்னங்களில் போட்டியிடுவதைக் காணலாம்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தளவில் வடகிழக்கில் மரச்சின்னத்திலும், வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் மரச்சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்திலும் இணைந்தும் போட்டியிடுகிறது.

 

வடகிழக்கிற்கு வெளியில் நீண்டகாலத்தின் பின்னர் மரச்சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால் கொழும்பு, கண்டி, கம்பஹா போன்ற பல இடங்களில் அமோக வரவேற்பை மரம் பெற்று வருவதை தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் காண முடிகின்றது.

 

தேர்தல் இறுதிநேர சூறாவளி பிரசாரத்தில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்ளும் நோக்கில் கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மக்களால் ஆமோக வரவேற்பளிக்கப்படுவதைக் காண முடிகின்றது.

 

இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களில் ஆட்சியமைக்கவும் ஆட்சியைத்தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.

 

தேர்தலின் பின்னரான சூழல் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமானதாக அமையுமென்பதை தேர்தல் கால முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.

 

தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் சமூகம் தொடர்பான போக்கு, எதிர்கால சவால்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகமும் தங்களுக்கான தனித்துவக்கட்சி தொடர்பில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளதைக் காண முடிவதோடு, தேசிய மக்கள் சக்தியின் அலையில் அள்ளுண்டு போனவர்கள் தற்போது சிந்திக்கத்தொடங்கி இருக்கிறார்கள்.

 

பலரும் தற்போது முஸ்லிம் காங்கிரஸை நோக்கி வருவதையும், அதன் வேட்பாளர்களை ஆதரிப்பதையும் காண முடிகிறது.

 

குறிப்பாக, இளைஞர்கள் அநுர அலையில் அள்ளுண்டாலும் தற்போதைய சூழ்நிலையில் தங்களது பிரதேசங்களுக்கு தேசிய மக்கள் சக்தி பொருத்தமான வேட்பாளர்களை அடையாளப்படுத்தவில்லை என்பதனால் அதிருப்தியடைந்து தங்களது ஆதரவை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வருவதையும் காணலாம்.

 

நமக்காய் பேசுவதற்கும் ஒரு கட்சி தேவை என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமை ரவூப் ஹக்கீமும் அடையாளம் பெறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *