ஆசிரியர் தலையங்கம்: 13
வணக்கம் என் உறவுகளே!
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நீண்ட வரலாற்றில் இதுவரை எழுதப்படாத ஒரு புதிய அத்தியாயம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்த பேருந்து சேவையில், பெண் நடத்துனர்கள் உத்தியோகப்பூர்வமாக பணியில் இணைக்கப்பட்டிருப்பது ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பாக மட்டுமல்லாமல் சமூகத் தடைகளை உடைத்த ஒரு அரசியல்-சமூக வெளிப்பாடாக கொள்ளப்படுகின்றது.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு, “பெண்களுக்கு சம உரிமை” என்ற சொற்றொடரை மேடைகளிலிருந்து இறக்கி, நேரடியாக வீதிக்கு கொண்டு வந்துள்ளது.
முதற்கட்டமாக 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, புதிய, கௌரவமான சீருடையில் அவர்கள் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். மாகும்பர–கடுவெல அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் தொடங்கியுள்ள இவர்களது பயணம், தொழில்முறை திறன், ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் சோதனையாகவும், சமூகத்தின் பார்வையை மாற்றும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது.
நெரிசலான நேரங்களில் டிக்கெட் வழங்குதல், பயணிகளைக் கையாளுதல் போன்ற சவால்கள் எளிதானவை அல்ல. அந்தச் சவால்களை பெண்கள் முன்வந்து ஏற்றுக்கொண்டிருப்பது, அவர்களின் திறனையும் தன்னம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்த நியமனம் பெண் பயணிகள் மற்றும் மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை அதிகரிக்கும் ஒரு நடைமுறைத் தீர்வாகவும் அமைகிறது.
“பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவர்கள்” என்ற பழைய சிந்தனைக்கு இது ஒரு தெளிவான மறுப்பைச் சொல்லி நிற்கின்றது. பெண்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் சக்திகள் என்பதற்கான வாழும் சான்றிதழ் இது. இந்த முயற்சி இத்துடன் மட்டும் முடிந்துவிடாமல், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சமத்துவம் அறிவிப்புகளில் அல்ல, அன்றாட வாழ்க்கையில் நடைமுறையாகும் போது மட்டுமே அது உண்மையான மாற்றமாகும். SLTB-யில் தொடங்கிய இந்தப் பயணம், இலங்கையின் சமூகப் பயணத்திற்கும் திசைகாட்டியாக மாற வேண்டும்.
என்றும் அன்புடன்,
ஆசிரியர்
அ.அருள் சஞ்ஜீத்

