இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவேந்தல் கட்டைக்காட்டில் இடம்பெற்றது.
சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 32ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது இன்று(18) மாலை 04.00 மணியளவில் ஆரம்பமாகியது.
சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முதல் நிகழ்வாக படுகொலையை நினைவுகூரும் விதமாக அமைக்கப்படவுள்ள நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மலர் மாலையினை உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் அணிவிக்க பொதுச் சுடரும் உயிரிழந்த மீனவர் ஒருவரின் தந்தையால் ஏற்றப்பட ஏனைய சுடர்களை சம நேரத்தில் உறவுகள் ஏற்றிவைத்தனர்.
அத்துடன் மலர் அஞ்சலியை வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் ஆரம்பித்துவைக்க அதனை தொடர்ந்து விருந்தினர்கள், உறவுகள், பொது மக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன், அருட்கலாநிதி ரமேஷ் அடிகளார், அருட்சகோதரன் ஜெனிஸ்ரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் காண்டிபன், சண்டிலிப்பாய் பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வசந்தன், பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

