தரம்சாலாவை அண்மித்துள்ள ஜம்மு மற்றும் பதன்கோட் ஆகிய நகரங்களில் விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து தரம்சாலாவில் இன்று(08) இரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இடையில் இரத்துச் செய்யப்பட்டது.
மழை காரணமாக தாமதித்து ஆரம்பமான அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி இடைநிறுத்தப்பட்டது.
அப்போது ப்ரப்சிம்ரன் சிங் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது ஆரம்ப ஜோடியான ப்ரியன்ஷ் ஆரியா 70 ஓட்டங்களை விளாசி இருந்தார்.
விளையாட்டரங்கில் உள்ள பேரொளி மின்கம்பம் ஒன்றில் ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஜம்முவிலும் பதான்கோட்டிலும் விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்தே ஐபிஎல் போட்டி இடைநிறுத்தப்பட்டு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
விமானத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக முழு ஐபிஎல் போட்டிகளும் இரத்துச் செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது.
23,000 ஆசனங்களைக் கொண்ட தரம்சாலா விளையாட்டரங்கில் பெருந்திரளான ரசிகர்கள் வெளியே என்ன நடக்கிறது என்பதை அறியாமல் போட்டியில் மூழ்கிப்போயிருந்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது திடீரென பேரொளி மின் கம்பம் ஒன்றில் விளக்குகள் அணைந்தது.
அரங்கில் பதற்றம் ஏற்படாமலிருக்க, மின்சாரக் கோளாறு என முதலில் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்ட ஏற்பாட்டாளர்கள் போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் இரசிகர்களும் மைதானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
‘பார்வையாளர்களிடம் எவ்வித பிதியோ, பதற்றமோ இருக்கவில்லை. அவர்களும் வீரர்களும் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்’ என இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது.
அரங்கிலிருந்து பார்வையாளர்கள் வெளியேறியபோது பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பாகிஸ்தானின் தாக்குதல்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரம்சாலாவில் உள்ள ஒரே ஒரு விமான நிலையமும் காங்க்ரா, சண்டிகாரில் உள்ள விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பஞ்சாப் – டெல்ஹி போட்டி நேற்று இரவு இடையில் கைவிடப்பட்டதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா என்பதில் சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
நிலைமைகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அதேவேளை, வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது உயிர்பாதுபாப்பு தொடர்பாக கரிசனை வெளியிட்டுள்ளனர்.
வீரர்களும் வெளிநாட்டு வீரர்களை ஆட்சேர்ப்பில் ஈடுபடும் அதிகாரிகளும் உடனடியாக வீடு திரும்ப விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.