“தமிழின அழிப்புக்கு எதிரான தேசிய எழுச்சி நாள்”

பதினேழு வருடங்களுக்கு முன்னர் அரசால் ‘மோதலற்ற பாதுகாப்பு வலயம்’ என அறிவிக்கப்பட்ட கடற்கரைப் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தபோது, அரசப் பாதுகாப்புப் படையினர் நிலம், கடல், வான் வழியாக நடத்திய கனரக ஆயுதத் தாக்குதல்களில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மே 18ஆம் திகதியை “தமிழின அழிப்புக்கு எதிரான தேசிய எழுச்சி நாள்” என அறிவித்து, முள்ளிவாய்க்கால் மண்ணில் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர தமிழர் மக்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடகிழக்கெங்கும் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்கள் உள்ளிட்ட நினைவேந்தல்களின் நிறைவாக, (மே 18) காலை 10.31 மணிக்கு, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் கண்ணீர், புலம்பல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

இறுதி யுத்தத்தில் தனது குடும்பத்தின் ஐந்து நெருங்கிய உறவினர்களை இழந்த போரால் பாதிக்கப்பட்ட தமிழ் தாயொருவரே இம்முறை பொதுச்சுடரை ஏற்றினார்.

ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்காலில் மலர்கள், தூபங்கள், தீபங்கள் கொண்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கலந்து கொண்டிருந்த சர்வதேச தூதரக பிரதிநிதிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், தங்களது பங்கேற்பை, இன்னும் நீதி வழங்கப்படாத போர்க்குற்றங்கள் குறித்து அரசுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் நினைவூட்டும் முக்கியமான வாய்ப்பாகக் குறிப்பிட்டனர்.

“குற்றவாளிகள் மீது விசாரணை நடத்தப்படுவது, வழக்குத் தொடரப்படுவது அல்லது தண்டனை வழங்கப்படுவது போன்ற எந்த முன்னேற்றத்தையும் நாம் இன்னும் காணவில்லை,” என நியூயோர்க்கை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகனத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் எலேன் பியர்சன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசின் கடமையையும், பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றிற்கு நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் வெளிநாட்டு அரசுகள் தொடர்ந்து இதுத் தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டவும் இது ஒரு அரிய வாய்ப்பு என நான் கருதுகிறேன்,” என அவர் கூறினார்.

கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களை நினைவுகூர முள்ளிவாய்க்காலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு, முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. உயிரிழந்த உறவினரை நினைவுகூர அந்தச் செடியை நட்டு, உயிருள்ள நினைவுச்சின்னமாக பாதுகாப்பதே அதன் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய இனஅழிப்பிற்கு பதினேழு வருடங்கள் நிறைவடைந்த நாளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற முக்கிய நினைவேந்தலில், இலங்கையின் தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும் கடந்த வருடத்தை விடவும் இம்முறை தமிழர் தாயக மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், முள்ளிவாய்க்கால் பிரகடனத்தை தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளார் வாசித்தார்.

தமிழின அழிப்பிற்கான நீதிக்கான போராட்டங்கள், நில மீட்புப் போராட்டங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரும் போராட்டங்கள் ஆகியவை வன்முறையால் அடக்கப்படுகின்றன என்றும், ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினத்தின் கூட்டு உளவியலின் மீது ஒரு பெரும் போர் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“நாங்கள் நினைவு கூரும் வரைக்கும் எங்களை யாராலும் அழிக்க முடியாது” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50வது ஆண்டு நினைவு ஆண்டாகும் எனவும், சுதந்திரமும் இறைமையும் கொண்ட ஈழத் தமிழ்த் தனியரசே தமிழினத்தின் கூட்டு இருப்பை பாதுகாக்கும் என உரக்கக் கூறிய வரலாற்று நிகழ்வாக அது அமைந்தது என்றும் பிரகடனம் நினைவுகூர்ந்துள்ளது.

தமிழ்த் தாயகத்தின் சிங்கள-பௌத்தமயமாக்கலை தடுக்குதல், தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி கோருதல்,
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வலியுறுத்துதல், கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தடுக்குதல்,
தமிழ் தேசிய நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றுபட்டு போராடுதல், ஆகிய ஆகிய உறுதிமொழிகள் முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டன

“மே 18 தமிழ் இன அழிப்பிற்கு எதிரான தேசிய எழுச்சி நாள்” என பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற 17ஆவது ஆண்டு நினைவேந்தலுடன் இணைந்து, “நினைவாயுதம்” என்ற தலைப்பில், இனஅழிப்பிற்கு உள்ளான தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களையும் வேதனைகளையும் எதிர்கால தலைமுறைகளுக்குக் கடத்தும் செல்லும் நோக்கில், முள்ளிவாய்க்காலுடன் தொடர்புடைய புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் நினைவுப்பொருட்கள் அடங்கிய மூன்று நாள் கண்காட்சியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

போரில் உயிரிழந்த வடக்கு தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்ற நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை, சிங்கள பிரிவினைவாத குழுவொன்று முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் வெறுப்புணர்வூட்டும் வார்த்தைகளால் திட்டி மோதலுக்கு தூண்டியதாக கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *