அக்கரைப்பற்றில் “டிஜிட்டல் பாதுகாப்பு கிளப்” உருவாக்கம்

அக்கரைப்பற்று பகுதியில் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “டிஜிட்டல் பாதுகாப்பு கிளப்” உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெறுப்புப் பேச்சு, ஒன்லைன் மோசடி, போலிச் செய்திகள், இணையவழி மிரட்டல் மற்றும் இணையவழி துன்புறுத்தல் போன்ற டிஜிட்டல் அபாயங்களும் அதிகரித்து வருகின்றன.

 

 

இந்த நிலையை கருத்தில் கொண்டு சர்வோதயா, அமன் இலங்கை மற்றும் யுனிசெஃப் ஆகிய அமைப்புகள் இணைந்து “வெறுப்புப் பேச்சு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த 23ஆம் திகதி அக்கரைப்பற்று EPL Campus வளாகத்தில் நடத்தியிருந்தன.

 

 

இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு, டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக செயல்படுவது தொடர்பான அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வையும் பெற்றுக்கொண்டனர்.

 

 

நிகழ்வின் முக்கிய அம்சமாக “டிஜிட்டல் பாதுகாப்பு கிளப்” உருவாக்கப்பட்டதுடன், அதற்கான நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்தக் கிளப்பின் மூலம் சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் விழிப்புணர்வு, வெறுப்பு பேச்சு மற்றும் போலி செய்திகள் பரவலை கட்டுப்படுத்துதல், சைபர் பாதுகாப்பு தொடர்பான அறிவை இளைஞர்களுக்கு வழங்குதல், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

மேலும் மோசடி, ஹேக்கிங் மற்றும் ஒன்லைன் மோசடி போன்ற டிஜிட்டல் அபாயங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதுடன், பொறுப்பான இணைய பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்காலத்தில் பள்ளிகள், சமூகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

இந்த “டிஜிட்டல் பாதுகாப்பு கிளப்” உருவாக்கம் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான டிஜிட்டல் சமூகத்தை உருவாக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *