சம்மாந்துறையில் 4 கிராமிய வீதிகள் புனரமைப்புப் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பம்

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீரமுனை-04, மலையடிக்கிராமம்-1, 2 மற்றும் செந்நெல் கிராமம்-02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் சுமார் 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின்கீழ், கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக நான்கு முக்கிய கிராமிய வீதிகளின் புனரமைப்புப்பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபாவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில், வீரமுனை – 04 பிரிவின் கோயில் 4ஆம் குறுக்கு வீதி, மலையடிக்கிராமம் – 01 உக்கர் வீதி, மலையடிக்கிராமம் – 02 முஸ்தாக் அலி வீதி, செந்நெல் கிராமம் – 02 ஆர்.டி.எஸ். வீதி ஆகிய 4 வீதிகளின் புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீதி அபிவிருத்திப் பணிகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்றிட்டப் பொறுப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான வை.பி.எம். நவாஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரீப், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம். முஸ்தபா, பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இப்புனரமைப்புப் பணிகள் நிறைவடைவதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *