தரமான ஊடக அறிவு தொடர்பாக தெளிவுபடுத்தும் மட்டக்களப்பு மாவட்ட பயிற்சிப்பட்டறை

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களம் நடாத்தும் தரமான ஊடக அறிவுள்ள திறமையான இலங்கை பாடசாலை சமூகத்தை உருவாக்குவதற்காக பாடசாலை ஊடக கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகமும் பாட ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் மாகாண நிகழ்ச்சித்திட்டம் – 2026 மட்டக்களப்பில் நடைபெற்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (04) காலை 8.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை குறித்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.

 

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்தால் குறித்த பயிற்சிப்பட்டறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் தரமான ஊடக அறிவு மற்றும் டிஜிட்டல் பொறுப்பு தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பிரிவின் விரிவுரையாளர் ஜோயேல் ஜய்ருஸ் அவர்களும், மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பாடசாலை ஊடகக் கழகங்களின் வகிபங்கு எனும் தலைப்பில் – ஊடகக் கழகங்களுக்கான மூலோபாயத் திட்டமிடம் தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எம்.எஃப்.பவாஸும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலும் அடிமையாதலும் தொடர்பாக உயர் தொழில்நுட்ப கல்லூரியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவரும் உதவி விரிவுரையாளருமான கே.தேவரூபனும் வளவாண்மை மேற்கொண்டிருந்தனர்.

 

குறித்த செயலமர்வின் இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழினை வழங்கிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *