மியான்மார் இராணுவம் கடந்த 6 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மியான்மாரில் தேர்தல் நடத்தப்படும் என கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் மியான்மார் இராணுவம் அறிவித்திருந்தது. அன்று முதல், வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் குறைந்தபட்சம் 702 பேர் வரை கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “கொல்லப்பட்டவர்களில் 224 பெண்கள் மற்றும் 153 குழந்தைகளும் அடங்குவர். இத்தகைய அழிவுக்கும் துயரத்திற்கும் ஜெட் போர் விமானங்கள், ட்ரோன்கள் போன்ற வான்வழித் தாக்குதல்கள் முக்கிய காரணமாகத் தொடர்கின்றன” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி, ”702 பேர் கொல்லப்பட்டதற்கு மியான்மார் இராணுவமே பொறுப்பு. இதனால், மற்ற ஆயுதக் குழுக்களால் மக்கள் உயிரிழக்கவில்லை என்று அர்த்தமில்லை. இந்தக் கணக்குகள் எங்களுக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தரவுகள் மட்டுமே. இது முழுமையான புள்ளிவிவரம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

