வடமாகாணத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்: விவசாயிகள் விண்ணப்பித்து நெல்லை ஒப்படைக்க அழைப்பு

வடமாகாணத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் அருகிலுள்ள நெல் களஞ்சியசாலைகளில் விண்ணப்பித்து தங்களது நெல்லை ஒப்படைக்க முடியும் என வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபையின் பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

வடமாகாணத்தில் நெல் கொள்வனவு தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவூட்டும் நோக்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

 

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்க விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள நெல் களஞ்சியசாலைகளில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் அவற்றை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

 

இந்த ஆண்டுக்கான கொள்வனவு விலையாக, நாடு மற்றும் வெள்ளை நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாய்க்கும், சம்பா (வெள்ளை மற்றும் சிவப்பு) வகை நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாய்க்கும், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 

ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் அதிகபட்சமாக 2,500 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாம் வாய்க்கால், பனங்கண்டி, உருத்திரபுரம், ஏழாம் வாய்க்கால், இராமநாதபுரம், கண்டாவளை மற்றும் குஞ்சுப்பரந்தன் உள்ளிட்ட நெல் களஞ்சியசாலைகளில் கொள்வனவு இடம்பெறும்.

 

அதேபோல், முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை, முறிப்பு, கொக்குத்தொடுவாய், கனகராயன்குளம், சுதந்திரபுரம் மற்றும் துளுக்காய் ஆகிய நெல் களஞ்சியசாலைகளிலும், வவுனியா மாவட்டத்தில் வெளிக்குளம், ஈச்சங்குளம், பூவரசங்குளம், நெடுங்கேணி மற்றும் மாமடு ஆகிய பகுதிகளிலும், மன்னார் மாவட்டத்தில் முருங்கன், நாடார் கடுக்காய்குளம் மற்றும் கரடிக்குளம் ஆகிய நெல் களஞ்சியசாலைகளிலும் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள நெல் களஞ்சியசாலைகளின் முகாமையாளர்களை தொடர்புகொண்டு, தேவையான ஆவணங்களுடன் தங்களது நெல்லை ஒப்படைக்குமாறு வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபையின் பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *