இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழக மாணவர்களினால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் சேர்க்கையை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) நடைபெற்றது.

 

இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே. அருள்சிவம் தலைமையில், கல்லடிப் பாலத்திலிருந்து மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரையிலான பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

 

இந்நிகழ்வின் மூலம், நவீன உலகின் தொழில்வாய்ப்பு தேவைகளுக்கு ஏற்ப திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கும், புதிய தொழில்முனைவோர்களாக இளைஞர்களை உருவாக்குவதற்கும் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக வழங்கிவரும் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

மேலும், உயர் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் நவீன இயந்திரங்களின் உதவியுடன் இளைஞர், யுவதிகளுக்கு தரமான தொழில்நுட்பக் கல்வி மற்றும் செயன்முறைப் பயிற்சிகளைப் பெறுவதற்கான அனைத்து வசதிகளும் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

அத்துடன், இலங்கையின் நீலப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் திறன்மிக்க மனித வளத்தை உருவாக்கும் பணியிலும் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

 

நாடளாவிய ரீதியில் இயங்கிவரும் 08 பிராந்திய நிலையங்களின் ஊடாக இளைஞர், யுவதிகளின் தொழில்திறனை மேம்படுத்துவதுடன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் வழங்கி வருகிறது.

 

மேலும், என்விகியூ லெவல் 4 சான்றிதழ் கற்கைநெறிகள் மற்றும் டிப்ளோமா கற்கைநெறிகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருவதுடன் சர்வதேச தரத்திற்கு இணையான தொழில்தகைமையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு கற்கைநெறிகளும் இங்கு கற்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *