முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் – 2026-ஐ முன்னிட்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட கலந்துரையாடல் இன்று (17) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்ற இக்கலந்துரையாடல், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது, முன்பிள்ளைப்பருவ மற்றும் பராமரிப்பு அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ. முரளிதரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தேசிய வாரத்தின் நோக்கங்கள் மற்றும் மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

 

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 25,550 சிறுவர்கள் 0-3 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 18,329 சிறுவர்கள் 3 தொடக்கம் 5 வயது முன் பிள்ளைப் பருவத்தினர் காணப்படுவதாகவும், 563 பாலர் பாடசாலைகளில் குரு அபிமானி கொடுப்பனவுடன் 144 பாலர் பாடசாலை ஆசிரியர் பணியாற்றுகிறார்கள். இதில் 278 பாலர் பாடசாலைகளில் 7,779 முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் போசாக்கான காலை உணவு வழங்குதல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக, மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நடவடிக்கைளுக்காக யுனிசெப் நிறுவனத்தின் பிராந்திய அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பெறுபேறுகள், ஹேமாஸ் தனியார் நிறுவனம் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காக அவர்களின் சமூக சேவை செயற்பாட்டின் ஊடாக பாலர் பாடசாலை உருவாக்கியமை போன்ற விடயங்கள் பாராட்டப்பட்டன.

 

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். மோகனகுமார் மற்றும் சிறுவர் மனநல ஆலோசகர் வைத்தியர் டான் சௌந்தரராஜா ஆகியோர், குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனநலத்தின் அவசியம் குறித்து தெளிவு படுத்தினர்.

 

இதில், முன் பிள்ளைப் பருவ சிறுவர்களின் செயற்பாடு ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுப்பதற்கு வழிநடாத்துதல், தரமான ஆரம்பகால கல்வி, பாதுகாப்பு, போசாக்கு மற்றும் உளவள மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

இந்நிகழ்வில் மாவட்டத்தின் சமூக சேவைகள் திணைக்களங்களின் அதிகாரிகள், சுகாதாரத் துறை பிரதிநிதிகள், முன்பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான உத்தியோகத்தர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *