அடம்பிடிக்கும் பிள்ளைகளை ஆசுவாசப்படுத்த அலைபேசி தீர்வல்ல – யஸீர் அறபாத்(BA)

மீராவோடையில் இயங்கி வரும் ‘கிட்ஸ் கார்டன்’ (Kids Garden Montessori) முன்பள்ளியின் 8வது விளையாட்டுப்போட்டியும் சிறுவர் தின நிகழ்வும் நேற்று முன் தினம் (04) ஹொரைஸன் உள்ளக விளையாட்டு வளாகத்தில் (Horizon Indoor Sports Complex) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஏ.எல்.எம்.இர்பான் (HFA)தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆராய்ச்சி அதிகாரி எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனதுரையில்,

தற்காலத்தில் சிறுவர்களைப்பெரிதும் ஆக்கிரமித்து வரும் கைத்தொலைபேசிப்பயன்பாடு குறித்துப் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும்.

வீடுகளில் பிள்ளைகள் குறும்பு செய்யும் போதோ அல்லது அடம்பிடிக்கும் போதோ அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தற்காலிக தீர்வாகப் பெற்றோர் பிள்ளைகளின் கைகளில் அலைபேசியைக் கொடுத்து விடுகிறார்கள்.

ஆனால், காலப்போக்கில் பிள்ளைகள் அலைபேசிப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதற்குள்ளேயே மூழ்கி விடும் அபாயம் ஏற்படுகிறது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், சிறுவயதிலேயே பார்வைக்கோளாறும் அதனை சீர்செய்ய கண்ணாடி அணியும் சூழ்நிலையும் ஏற்படுகின்றது.

எனவே, பெற்றோர் இது விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகளை தொலைபேசிப் பழக்கத்திலிருந்து மீட்டு, அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளில் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலமே அவர்களை ஆரோக்கியமான பிள்ளைகளாக வளர்த்தெடுக்க முடியும்.

சிறுவர்களின் நல்வாழ்விற்கு அடித்தளமிடும் இவ்வாறான முன்பள்ளி நிகழ்வுகள் மிகவும் வரவேற்கத்தக்கவை.

ஏனைய முன்பள்ளிகளும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு, இது போன்ற விளையாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவதில் கவனஞ்செலுத்துவது அவசியமாகுமென மேலும் குறிப்பிட்டார்.

இதன் போது விண் ஒளி கலைமன்றத்தின் தலைவர் ஏ.எல்.எம்.இர்சாத், அஸ்பெக் அகடமியின் பொருளாளர் எம்.பி.எம்.அப்துல்லாஹ், ஏ.ஏ.எம்.அலி சப்ரான் (கடற்றொழில் உத்தியோகத்தர்), ஏ.எச்.எம்.ரஸான் (ஆசிரியர்), வை.எம்.றிஸ்கான் (கணக்காய்வு உத்தியோகத்தர்), எம்.எஸ்.எம்.றிபாஸ் (ஆசிரியர்), எச்.றிஸ்கான் முகாமையாளர் (எல்.பி.ஃபைனான்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *