2027 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (17) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார குறிப்பிடுகையில், தங்களது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது நாம் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச கால்நடை வைத்திய அலுவலகங்கள், அதுபோல மிருகக்காட்சிசாலை திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், விலங்கு தனிமைப்படுத்தல் பிரிவுகள் மற்றும் நாட்டின் அனைத்து இடங்களிலும் கால்நடை வைத்தியர்கள் வேலை செய்யும் இடங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கின்றோம்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்ட ஆவணத்தில் எங்களைப் பற்றிய எந்தவொரு கொடுப்பனவு அதிகரிப்பும் அல்லது எங்களைப் பற்றிய எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை.
அதனால்தான் நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கிறோம். மேலும், இது குறித்து அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால், 2027 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திப் பணிகளிலிருந்து நாம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
எவ்வாறாயினும், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர வீரசிங்க குறிப்பிடுகையில், வரவு-செலவுத் திட்டம் மூலம் சமூர்த்தி துறைக்கு பல நிவாரணங்கள் கிடைத்துள்ளன என்றார்.
வரவு-செலவுத் திட்டத்தில் ரயில்வே சேவை குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை என இலங்கை ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாரத்ன தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூலமும் நிவாரணங்கள் கிடைத்துள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ. பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

