தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த வரவு -செலவுத் திட்ட யோசனைகள் மூலம் மக்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
குறிப்பாக, இந்நாட்டின் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன், அவர்களின் மாதாந்த வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குதல் மற்றும் வற் (VAT) வரியை நீக்குவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டில் மத்திய தர வருமானக் குடும்பமொன்றின் மாதாந்த வருமானம் மற்றும் செலவுக்கிடையில் 5,700 ரூபாய் சேமிப்பு காணப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில் அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, இன்று இவ்வாறான குடும்பமொன்றின் மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடும்போது செலவு 18,170 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும், அந்தப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மக்கள் கடன் பெறவோ, செலவுக் குறைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது தங்களது பெறுமதியான சொத்துக்களை அடகு வைக்கவோ நேர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தச் சூழலில் சாதாரண நடுத்தர வருமானப் பிரிவினர் முன்பை விடக் கடுமையான பொருளாதார அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டிய ஹர்ஷ டி சில்வா, அத்தகைய மக்களுக்கு எதாவது ஒரு நிவாரணத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
மக்கள் முகங்கொடுக்கும் உண்மையான பொருளாதாரச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

