ஐரோப்பிய நாடான இத்தாலியில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 43 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெரோனா நகரில் காவல்துறையினர் மற்றும் கராபினியேரி (Carabinieri) பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 30.79 கிராம் ஹஷீஷ், 9.10 கிராம் ஹெரோயின், 0.93 கிராம் கொக்கேயின், 5,280 யூரோ பணம் மற்றும் போதைப்பொருட்களை அளவிட்டு பொதி செய்வதற்கான உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சட்ட நடவடிக்கைகளுக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஆரம்பத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை வெரோனா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு, காவல் நிலையத்தில் முறையாக முன்னிலையாக வேண்டும், வெரோனா நகர எல்லைக்குள் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் தரப்பில் மேலதிக கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

