பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதிலுமிருந்து பல நாட்டுத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தனர். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அல் சிசி உள்ளிட்ட பல தலைவர்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர்.
இந்திய மண்ணில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இத்தாலிய பிரதமர் மெலோனி கடுமையாகக் கண்டித்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இத்தாலியின் முழு ஆதரவையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கும் அதன் பின்னணியில் உள்ளவர்களுக்கும் எதிரான அவரது அழைப்பையும், ஆதரவையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
“பிரதமர் மெலோனி இந்திய மண்ணில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இத்தாலிக்கு முழு ஆதரவையும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்த சர்வதேச தளங்கள் உட்பட இந்தியாவும் இத்தாலியும் தொடர்ந்து இணைந்து செயல்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சின் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது இரங்கலைத் தெரிவித்தார். இந்த வகையான காட்டுமிராண்டித்தனத்தை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் கூறினார். பிரான்சின் முழு ஆதரவையும் இந்தியாவிற்கு தெரிவித்தார்.
“ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தாக்குதலை அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, இந்திய மக்களுடன் முழு ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவித்தார். இந்த வகையான காட்டுமிராண்டித்தனம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.அவரின் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார், மேலும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியையும் தெரிவித்தார்” என்று வெளியுறவு அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசியும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு , இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தார். “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எகிப்து இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்கிறது” என்று அவர் உறுதியளித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி அவருக்கு விளக்கினார். அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். “காஷ்மீரில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மக்களுக்கு எனது இரங்கலையும், இஸ்ரேல் மக்களின் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் துயரத்தில் பங்கு கொண்டதற்கு பிரதமர் மோடி எனக்கு நன்றி தெரிவித்தார், பயங்கரவாதத்திற்கு எதிரான முக்கியமான போராட்டத்தில் நமது இரு நாடுகளும் தோளோடு தோள் நிற்கின்றன என்பதை வலியுறுத்தினார்.” என இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு, கொடூரமான பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு “எந்த நியாயமும்” இருக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்திருந்தார். தாய்வானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஜோசப் வூவும் பஹல்கம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
கனேடிய தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். கியூபெக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர் லியோ ஹவுசாகோஸ், இந்த தாக்குதலை “நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்” என்று கூறி, விரைவான நீதியை வலியுறுத்தினார். “இந்தியாவில் இந்து சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்படுவது வெறும் பயங்கரவாதம் மட்டுமல்ல – இது நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். குற்றவாளிகள் விரைவான மற்றும் சமரசமற்ற நீதியை எதிர்கொள்ள வேண்டும். உலகம் அமைதியாக இருக்கக்கூடாது” என்று ஹவுசாகோஸ் தெரிவித்துள்ளார்.
கனடிய பிரதமர் மார்க் கார்னி, “ஒரு அர்த்தமற்ற மற்றும் அதிர்ச்சியூட்டும் வன்முறைச் செயல்” என்று குறிப்பிட்டார்.”இந்த பயங்கரவாதத் தாக்குதலை கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாங்கள் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் கூறினார்.
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டில் அரபு உலக நாடுகள் ஒன்றுபட்டுள்ளன. பயங்கரவாதச் செயலை அந்த நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. குவைத்தின் பட்டத்து இளவரசர் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு “பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட துயரகரமான உயிர் இழப்பு குறித்து” இரங்கல் தெரிவித்தார்.
பஹல்கம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து வகையான வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை முழுமயாக நிராகரிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், இந்தியக் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சவூதி தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வெளியுறவு அமைச்சும் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.”கொடூரமான” பயங்கரவாதத் தாக்குதலை முஸ்லிம் உலக லீக் (MWL) கண்டித்தது. மேலும் அதை எந்த மதம் அல்லது கலாசாரத்துடனும் தொடர்புபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் நிராகரித்தது.

