செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு

செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட டிஆர்ஈபி திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை முன்னிட்டு குறித்த திட்டம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் கே. விமலநாதன் தலைமையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிறைவேற்றதிகாரி ஆர். ராஜ்குமாரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்கால் சூறாவளி அனர்த்த வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் குறித்த அனர்த்த நிவாரண அவசர நிதித் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு சிறந்த முறையில் நிவாரண உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இக்கலந்துரையாடலின் போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேளையில் காணப்பட்ட சாதக பாதக நிலைமைகள் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 31 தன்னார்வத் தொண்டர்கள் சிறந்த முறையில் சேவையாற்றியிருந்தமையினைக் கௌரவிக்கும் வகையில் பிரதம அதிதியினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *