சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்று(18) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் தொடர்பாக ஏற்கனவே பல ஆரோக்கியமான கருத்தாடல்கள் பகிரப்பட்டுள்ளதாகவும், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவதற்கு கை கொடுப்பதன் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடியதாக காணப்படும் எனவும், அங்குள்ள பாடசாலை அபிவிருத்தி மற்றும் வணிக அபிவிருத்தி மேலும் அதிகரித்து செல்லும் நிலை காணப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமேதகு ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தினத்தன்று சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக அக்கறையுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாகவும், மைதானத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடாக நீண்டகால நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக எவ்வாறான முன்னேற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக சாதக, பாதக தன்மைகளை ஆராய்ந்து ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மண்டைதீவு மற்றும் வேலணையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பங்களிப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கபிலன், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் டிலும் தயாரத்தின, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த சாலக்கா, சில்வா, முகாமைத்துவ பணிப்பாளர் பெரேரா, மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் அகிலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரன்நாதன், உதவி மாவட்ட செயலாளர் தா்சினி, நில அளவைகள் திணைக்கள சிரேஷ்ட அத்தியட்சகர் தர்மபால, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *