சேனைப்புலவு பாலத்தை புனரமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

வவுனியா – வடக்கு பிரதேச செயலகப்பிரிவின், நெடுங்கேணி, சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சேனைப்புலவு பாலத்தை நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா – வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.

குறிப்பாக நெடுங்கேணி குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீர் பாதையினை ஊடறுத்துப் பாய்வதால் அவ்வீதியின் போக்குவரத்துத் தடைப்படுகின்றது.

இதனால் 150ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கும், தோட்டங்களுக்கும் செல்லும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்குக் கூட இடர்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக மருத்துவ சேவையை பெறுவதற்குகூட மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்தே பயணப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனவே சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலம் ஒன்றினை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் பாலத்தினை நிர்மானிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வவுனியா வடக்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *