வடக்கில் நிழல் அமைச்சர்களை ஏற்க முடியாது – விக்னேஸ்வரன்

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு முன்நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஆளுநரின் கீழ் உள்ள வடக்கு மாகாணசபைக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாக நியமித்தமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரித்த ஜேவிபியினர் தற்போது தேசிய மக்கள் சக்தியாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க வடக்கு கிழக்கு மாகாண சபையை அதிகாரம் உள்ள ஒரு சபையாக செயல்படுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது தெரிந்த விடயம்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபின் மாகாண சபை முறைமை தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளி விவகார அமைச்சராக இருக்கின்ற விஜித ஹேரத் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன் இன்று வரை பதில் கிடைக்கவில்லை.
ஒரு மாகாண சபை வினைத்திறனாக செயல்பட வேண்டுமானால் 160 நியதி சட்டங்களை உருவாக்க வேண்டும். இலங்கையில் அவ்வாறு எந்த மாகாணமும் உருவாக்கவில்லை.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் 25க்கு குறைவான நியதிச் சட்டங்களையே உருவாக்க முடிந்தமை துரதிஷ்டவசமான சம்பவமாக இருந்தாலும் அதற்கு அந்தந்த மாகாணங்களில் இருந்த ஆளுநர்கள் காரணமாக இருந்தார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் ரணில் விக்ரமசிங்க காலத்தில் மாகாண சபை முறை தொடர்பில் ஆலோசனை வழங்கும் குழுவில் நான் அங்கம் வகித்தேன்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுடன் கொழும்பில் சந்தித்தபோது மாகாணங்களில் இருந்து மீள மத்திக்கு பெறப்பட்ட அதிகாரங்களை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
அவர் நிபுணர் குழு ஒன்றை நியமிப்பதற்கு பெயர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் அவருடைய காலத்தில் அதனை நிறைவேற்ற முடியாமல் போனது.
தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் பேசுவதற்குக் கூட விருப்பமில்லாதவர்களாக இருப்பது மாகாண சபை தேர்தல் ஒன்றை நடத்துவார்களா என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
மாகாண சபை தேர்தலை நடாத்த விருப்பம் இல்லாத காரணத்தினால் வடக்கு மாகாணத்துக்கு தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாக உத்தியோகப்பற்றற்ற முறையில் செயற்படுத்தப்பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு நன்கு தெரியும் நிழல் அமைச்சர்களை சட்டரீதியாக நியமனம் செய்ய முடியாது. அத்தோடு ஒரு மாகாணத்திற்கு ஒரு வகையிலும் இன்னொரு மாகாணத்துக்கு வேறு வகையிலும் செயல்படுத்த முடியாது என்பது நன்கு தெரியும்.
ஆகவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியினர் மாகாண அதிகாரங்களை வழங்காது தமது கட்டுப்பாட்டில் மாகாண நிர்வாகங்களை நடத்துவதற்கு எத்தணிப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *