நாட்டின் பல இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்த பிரதேசத்தின் தாக்கம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குறைந்த அழுத்த பிரதேசமாக வலுவடைந்து, தற்போது நாட்டிற்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் தொடரும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *