இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026ம் ஆண்டுக்கான வருடாந்தப்பொதுக்காங்கிரஸ் கூட்டம் நுவரெலியாவிலுள்ள அரலியா கிரீன் சிட்டி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வார் உமர் தலைமையில் நாடு முழுவதிலுமுள்ள 60 உதைப்பந்தாட்ட லீக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இலங்கை காற்பந்தாட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி, நிர்வாக நடவடிக்கைகள், நிதி முகாமைத்துவம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்திட்டங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கடந்தாண்டின் செயற்பாடுகள், நிதி அறிக்கைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் ஆண்டுக்கான 75 கோடி ரூபா வரவு-செலவுத்திட்டமும் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்டது.
இந்நிதியொதுக்கீட்டின் மூலம் தேசிய அணிகளின் மேம்பாடு, இளைஞர் மற்றும் பெண்கள் காற்பந்து வளர்ச்சி, நடுவர் பயிற்சித்திட்டங்கள், பயிற்சியாளர் மேம்பாடு மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான லீக் போட்டிகளை மேலும் வலுப்படுத்துதல், கிராமப்புற திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு வருதல், சர்வதேச தரத்திற்கேற்ப விளையாட்டுச் சூழலை உருவாக்குதல் தொடர்பாகவும் கவனஞ்செலுத்தப்பட்டது.
அத்துடன், லீக்குகளுக்கான அலுவலக ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கும், லீக்குகளின் ஆண்டுக்கான பராமரிப்பிற்கும் ஒரு தொகை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தி தலைவர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன், செயலாளர் ஏ.எல்.எம்.இர்பான் மற்றும் பொருளாளர் எஸ்.எம்.நளீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, ஓட்டமாவடி பிரதேசத்தில் காற்பந்து விளையாட்டின் வளர்ச்சி, இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள், பிராந்திய மட்ட விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் தங்களது கருத்துக்கள், முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த லீக் பிரதிநிதிகள் தங்களது பிரதேசங்களில் எதிர்நோக்கும் சவால்கள், விளையாட்டு மைதான வசதிகள், போட்டி ஏற்பாடுகள் மற்றும் வீரர் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தனர்.
அவற்றை எதிர்கால செயற்றிட்டங்களில் உள்ளடக்குவதற்கு சம்மேளனம் நடவடிக்கை எடுக்குமென இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் தெரிவித்தார்.

