கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட சிட்டிசன் மிரர் போட்டிகளில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகங்கள் ஏஏஏ தரச்சான்றைப் பெற்றுள்ளன.
தேசிய அளவில் ஏஏஏ தரத்தினைப் பெற்ற 50 பிரதேச செயலகங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தர தலைமையில் கொழும்பிலுள்ள கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
702 முக்கிய செயல்திறன் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மதிப்பீட்டு முறைமையின் கீழ், பங்கேற்ற 284 பிரதேச செயலகங்கள் அவற்றின் செயல்திறனுக்கு ஏற்ப ஏஏஏ முதல் டி வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, காணிப் பிரிவு, பதிவாளர் பிரிவு, வெளிக்களப் பிரிவு மற்றும் விசேட செயற்றிட்டப் பிரிவு ஆகிய ஏழு பிரிவுகளின் தரவுகளின் அடிப்படையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன்படி, சிட்டிசன் மிரர் போட்டிகளில் பங்கேற்று ஏஏஏ தரத்தினைப் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகங்களுக்கு இந்நிகழ்வின் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிரதேச உற்பத்தித்திறன் குறியீடு 1.0 மென்பொருள் அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் ஏஏஏ தரப்படுத்தலுடன் முதலிடம் பெற்றதுடன் தேசிய மட்டத்தில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
மாவட்ட மட்டத்தில் ஏஏஏ தரப்படுத்தலின் அடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தையும், மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும், கோறளைப்பற்று பிரதேச செயலகம் நான்காம் இடத்தையும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் ஐந்தாம் இடத்தையும், காத்தான்குடி பிரதேச செயலகம் ஆறாம் இடத்தையும், போரதீவுப்பற்று பிரதேச செயலகம் ஏழாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தேசிய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் குறியீட்டு முறைமை, பிரதேச செயலகங்களின் நிர்வாகத் திறன், சேவை வழங்கல் தரம் மற்றும் பொதுமக்கள் திருப்தி ஆகியவற்றை அளவிடும் முக்கிய கருவியாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

