மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தலைவர் சமரி அதபத்து தலைமையிலான இந்த அணியில், அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்ற பல வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளதுடன், சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அணியில் சமரி அதபத்து, இமேஷா துலானி, சஞ்சனா கவிந்தி, ஹன்சிமா கருணாரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, அனுஷ்கா சஞ்சீவனி, கவீஷா தில்ஹாரி, ஹசினி பெரேரா, கௌஷினி நுத்யங்கனா, நிமாஷா மீபகே, சுகந்திகா குமாரி, ரஷ்மிகா செவ்வந்தி, சாமுடி பிரபோதா, மிதாலி அயோத்யா மற்றும் காவ்யா கவிந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எனினும், ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய விஷ்மி குணரத்ன இந்த அணியில் இடம்பெறவில்லை. அதேபோன்று, இரு தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலக்ஷிகா சில்வாவும் அணியில் சேர்க்கப்படவில்லை.
ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்திருந்த சேதன விமுக்தியும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை.
இதேவேளை, திறமையான இளம் வீராங்கனைகளுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை தொடரில் கவனம் ஈர்த்த 17 வயதான சாமுடி பிரபோதா மற்றும் 19 வயதான ரஷ்மிகா செவ்வந்தி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ரஷ்மிகா செவ்வந்தி கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

