பெஸ்டியன் மாவத்தையில் திடீர் பேருந்து சோதனை

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகளின் வீதி அனுமதிகளை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகனப் புகை உமிழ்வுத் திட்டத்தின் மூலம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்துகளின் வீதித் தகுதி மற்றும் புகை உமிழ்வு என்பன பரிசோதிக்கப்பட்டதுடன், சோதனையிடப்பட்ட 59 பேருந்துகளில் 39 பேருந்துகளுக்கு பராமரிப்பு உத்தரவுகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகல் வேளையில் இயக்கப்படாத மற்றும் பரிசோதனைகளில் சிக்காத பேருந்துகளை இலக்கு வைத்து இந்த விசேட இரவு நேர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதற்குச் சமாந்தரமாக, கிளிநொச்சி பகுதியில் இயங்கும் பேருந்துகளின் வீதித் தகுதியைப் பரிசோதிக்கும் மற்றொரு விசேட திட்டமும் நேற்று (22) பகல் வேளையில் வாகனப் புகை உமிழ்வுத் திட்டத்தினால் செயல்படுத்தப்பட்டது

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக இயக்கத்திற்குப் பொருத்தமற்ற பேருந்துகளைக் கண்டறியும் இந்த விசேட பரிசோதனைகளை வாரந்தோறும் தொடர்ச்சியாக நடத்த வாகனப் புகை உமிழ்வுத் திட்டம் திட்டமிட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து இத்திட்டத்தை எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் வாரந்தோறும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *