நாடு பூராகவும் பொருளாதாரத் தொகை மதிப்பு (2025/26) ஆரம்பம்!

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களமானது நாடளாவிய ரீதியில் நடாத்துவற்கு திட்டமிட்டுள்ள பொருளாதார தொகைமதிப்பின்   விவசாய தகவல்களை சேகரிக்கு வேலைத் திட்டமானது நாடு பூராகவும்  அக்டோபர் 01 முதல் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இதன் பிரதான நிகழ்வு  அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள கோட்டமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்றது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் புள்ளிவிபவியலாளரும் உதவி தொகைமதிப்பு அத்தியட்சகருமான ரீ. ஜெய்தனனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரத்தனம் உட்பட மேற்படி கணக்கெடுப்புக்கான மட்டக்களப்பு மாவட்ட வலய மேற்பார்வை உத்தியோகத்தரும் சிரேஷ்ட புள்ளிவிபர உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். றூமி மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை ஆரம்பித்து கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்,  நாட்டிலுள்ள விவசாயத் துறையில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து விவசாயத்துறை சார்ந்த  எதிர்கால திட்டங்களை அரசாங்கம் வகுத்துக் கொள்வதற்கு இந்த தகவல் சேகரிப்பு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த  கணக்கெடுப்பின் வெற்றியானது  உண்மையான தகவல் சேகரிப்பில் தங்கியுள்ளதால் பொதுமக்கள் கணக்கெடுப்பு கடமையில் ஈடுபடுகின்றவர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது கோட்டமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வீடுகளில் தகவல் சேகரிக்கும் பணியானது அரசாங்க அதிபர் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *