மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பனிச்சங்குளத்தின் புனரமைப்புப் பணிகள் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறைவடைந்துள்ளன.
சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியளிக்கும் இக்குளத்தின் மூலம் 300 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பயனடையவுள்ளனர்.
நீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றிக் காணப்பட்ட பனிச்சங்குளத்தின் குளக்கட்டைப் புனரமைப்பதற்காக, பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் க. திலிப்குமார் குளத்தை நேரில் பார்வையிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார்.
இதன்போது, தற்போது சிறுபோகத்தில் சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கையை, குளத்தின் முழுமையான அபிவிருத்தி மூலம் மேலும் விரிவுபடுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் மேலதிக நிதியைப் பெற்றுக்கொண்டு குளத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் விவசாய நிலப்பரப்பை அதிகரித்து, அதிகளவிலான விவசாயிகள் நன்மையடைவதுடன், பிரதேசத்தின் விவசாய உற்பத்தியையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

