கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 20 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது நேற்று(29) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வினை மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து நடாத்தியன.
தராகி சிவராமனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் சிவராம் மற்றும் ஊடகவியலாளர் ரஜீபன் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வு மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பா. அரியநேந்திரன், சுதந்திர ஊடக இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லக்ஸ்மன், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ். சிவயோகநாதன், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


