விவசாய நவீனமயமாக்கல் கிராம திட்டத்தின் நெல் நாற்று நடவு விழாவும் விழிப்புணர்வு நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது.
நெற்செய்கையில் உற்பத்தித் திறனை அதிகரித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்புணர்வூட்டல் மற்றும் இயந்திர முறையிலான நாற்று நடுகையினை மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கோடு குறித்த விழிப்புணர்வூட்டும் நிகழ்வு கடந்த 29 திகதி மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம். பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
பனங்கண்டிச்சேனை கண்டத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், கெமர்ஷல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ரீ. கஜரூபன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் விரிவுரையாளர் டொக்டர். கிரிதரன், பனங்கண்டிச்சேனை கண்டத்தின் தலைவர் என். மகேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளனத்தின் உப தலைவர் அருளானந்தராஜா ரமேஸ், ஆயித்தியமலை விவசாய பிரிவின் விவசாய போதனாசிரியர் ரீ. கோசல ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக நாற்று நடுகை, பரசூட் முறை மூலம் நெற் செய்கையில் ஒரு அலகு பரப்பில் இருந்து கிடைக்கும் உற்பத்தியின் அளவை அதிகரித்தல், ட்ரோன் பாவனை மற்றும் நவீன இயந்திரங்களின் பாவனையை அதிகரித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு இதன் போது முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த திட்டம் தொடர்பான விளம்பரப் பலகை இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் ன், பரசூட் முறையிலான நாற்று நடுகையினை மாவட்ட அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த திட்டத்திற்கான பூரண அனுசரனையினை கொமர்ஷல் வங்கி மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


