நுவரெலியா, கிரகரி ஏரியில் சினமன் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செஸ்னா 208 காரவன்’ ரக நீரில் இறங்கும் திறன் கொண்ட கடல் வானூர்தி தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது குறித்து இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், விமானத்திலிருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஏனைய தரப்பினருக்கோ அல்லது பொதுச் சொத்துக்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த வானூர்தி நுவரெலியாவிலுள்ள பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக உள்நாட்டு வானூர்தி சேவையில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிரகரி ஏரியில் கடந்த பல ஆண்டுகளாக நீர்நிலை வானூர்தி சேவைகள் தடையின்றி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்ற முதல் விபத்து இதுவென அதிகார சபை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான செஸ்னா 208 ரக வானூர்தி 2013 ஆம் ஆண்டு சினமன் எயார் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டது.
இது சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் அங்கீகாரத்துடன், முறையான பதிவு மற்றும் விமானத் தகுதிச் சான்றிதழ்களைப் புதுப்பித்து, சட்டப்பூர்வமாக இயக்கப்பட்டு வரும் ஒரு விமானமாகும்.
தற்போது, துறைமுகங்கள் மற்றும் வானூர்தி போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் விசேட விசாரணைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் காவல்துறை ஆகியன முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

