2025 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
ஒரு மாநகர சபை, 2 நகர சபைகள் மற்றும் ஒன்பது பிரதேச சபைகளுக்காக மொத்தம் 274 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 455,520 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(06) காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் 22.11%வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
அதில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை பிரிவில் 31.70% வீதமான வாக்குகள் ஆகக் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன் காத்தான்குடி நகர சபை பிரிவில் 14.52% வீதமான வாக்களிப்பு குறைவாக இடம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

