‘பிக் பாஸ்’ தமிழ் சீசன் 9 இன் வெற்றியாளராக திவ்யா தெரிவு

பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ தமிழ் சீசன் 9 இன் பிரம்மாண்ட இறுதிப் போட்டி இன்று(18) நிறைவடைந்த நிலையில், அதன் வெற்றியாளராக திவ்யா கணேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இந்தப் போட்டித் தொடரில், ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களும் பின்னர் 4 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் என மொத்தம் 24 பேர் களமிறங்கினர்.

 

சுமார் 100 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் திவ்யா கணேஷ், சபரி, அரோரா மற்றும் விகல்ஸ் விக்ரம் ஆகிய நால்வர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

 

வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளவராகக் கருதப்பட்ட கானா வினோத், இறுதிப் போட்டிக்கு முன்னதாக 18 இலட்சம் ரூபா பணப்பெட்டியுடன் போட்டியிலிருந்து சுயமாக வெளியேறியமை இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த சீசனில் இடம்பெற்ற ‘கார் டாஸ்க்’ போட்டியின் போது, போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் சாண்ட்ராவை காரிலிருந்து கீழே தள்ளியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதனை வன்மையாகக் கண்டித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, அவ்விருவருக்கும் ஒரே நேரத்தில் ‘ரெட் கார்டு’ வழங்கி வெளியேற்றினார். பிக் பாஸ் வரலாற்றில் இருவருக்கு ஒரே நேரத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த திவ்யா கணேஷ் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று, வெற்றியாளராக உருவெடுத்துள்ளார்.

 

மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இறுதி முடிவுகள் பின்வருமாறு அமைந்துள்ளன:

 

வெற்றியாளர்: திவ்யா கணேஷ்

 

இரண்டாம் இடம்: சபரி

 

மூன்றாம் இடம்: அரோரா

 

நான்காம் இடம்: விகல்ஸ் விக்ரம்

 

பிக் பாஸ் வரலாற்றில் ‘வைல்ட் கார்டு’ போட்டியாளராக உள்ளே நுழைந்து மகுடம் சூடிய இரண்டாவது போட்டியாளர் திவ்யா கணேஷ் ஆவார். முன்னதாக அர்ச்சனா 7வது சீசனில் வெற்றி பெற்றிருந்தார்.

 

ரித்விகா மற்றும் அர்ச்சனாவைத் தொடர்ந்து, பிக் பாஸ் கிண்ணத்தை வென்ற மூன்றாவது பெண் போட்டியாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *