பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் – பிரதமர்

வடக்கில் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர், போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

“போர் முடிந்து நீண்ட காலமாகிவிட்டது. ஆனால், அந்த அமைதி நம் இதயங்களில் முழுமையாக நுழைந்துவிட்டதா என்பதுதான் நமக்கு எஞ்சியிருக்கும் கேள்வி. இன்றும் கூட, இந்த நாட்டில் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல், அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் துன்பப்படும் பெண்கள் இந்த நாட்டில் உள்ளனர்.  அதனையும் தாண்டி, தனியாக தங்கள் குடும்பங்களை கவனித்துக் கொண்டு, குடும்பத்தை பாதுகாக்க மிகவும் கடினமாக உழைக்கும் பல பெண்கள் உள்ளனர்.”

மன்னார், அடம்பனில் 15ஆம் திகதி நடைபெற்ற மன்னார் மாவட்ட மகளிர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, போரின் விளைவுகளை பெண்கள் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது எனக் கூறினார்.

“எனவே, போரை செய்யும்போது, எங்களை கேட்டு அல்லவே போரை நடத்தினர் இல்லையா? ஆனால், அதன் விளைவுகளை நாங்கள் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது.”

பல ஆட்சியாளர்கள் போரை ஒரு ‘சாக்காகப்’ பயன்படுத்தி நாட்டின் குடிமக்களைப் பிளவுபடுத்துவதாகக் குற்றம் சாட்டிய பிரதமர், நாட்டின் அனைத்து குடிமக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதை உறுதி செய்வது தனது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போதைய ஆளும் கட்சியான தேசிய மக்கள் படையின் முக்கிய பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, மே 18, 2009 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போருக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை முழுமையாக ஆதரிப்பதில் முன்னணியில் இருந்த கட்சிகளில் ஒன்றாகும்.

இந்த நாட்டில் சில அரசியல் சக்திகளுக்கு இனவாதத்தை தூண்டுவதே அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாக காணப்படுவதாகவும் பிரதமர் ஹரிணி மன்னாரில் வைத்து குற்றம் சாட்டியிருந்தார்.

“அந்த இனவாத முகாம்கள் இன்னும் போராடி வருகின்றன, நம் நாட்டில் அத்தகைய ஒரு சித்தாந்தத்தையும் ஒருவருக்கொருவர் முரண்பாட்டையும் உருவாக்கும் முயற்சிகளை அவர்கள் இன்னும் கைவிடவில்லை. இனவாதத்தை தூண்டுவதே அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரே வழி என கருதும் அரசியல் சக்திகள் இன்னும் இந்த நாட்டில் உள்ளன.”

மன்னார், அடம்பனியில் நடைபெற்ற மன்னார் மாவட்ட மகளிர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பாலான பணிகளைப் பெண்கள் செய்தாலும், அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே கிடைப்பதாகவும், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *