யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தையிட்டி விகாராதிபதி ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது: விகாரைக்காக எல்லைப்படுத்தப்பட்ட காணிகளில் இருந்து ஒரு சிறு பகுதியைக்கூட விடுவிக்க முடியாது என தேரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் கூட்டம் இழுபறியுடன் நிறைவடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது பூர்வீக நிலங்களை இழந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் இந்த இரகசியப் பேச்சுவார்த்தை குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
“எங்கள் காணி உறுதிகளைப் பெற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், எங்களை ஏன் அழைக்கவில்லை? யாழ்ப்பாணப் பிரச்சினையை கொழும்பில் வைத்து இரகசியமாகப் பேசுவது ஏன்? அதிகாரிகள் எமக்கு எவ்விதத் தகவல்களையும் வழங்குவதில்லை. இது ஒருதலைப்பட்சமான செயல்!” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விகாரை வேலியைப் பின் நகர்த்தி, முதற்கட்டமாக சில காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கப்பட்டதாக கடந்த டிசம்பரில் வெளியான செய்திகள் உண்மையற்றவை எனத் தெரியவந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு இது தொடர்பாக எவ்வித நிதியும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

