எத்தனையோ பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது – சிவகார்த்திகேயன்

ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் தாய் கிழவி படம் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. இந்நிலையில் தாய் கிழவி பட விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசிய விஷயம் பலரையும் யோசிக்கவும், விமர்சிக்கவும் வைத்திருக்கிறது.

இதன்போது சிவகார்த்திகேயன் கருத்து தெரிவிக்கையில், ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற கனவோடு தான் எல்லோரும் இருக்கிறோம். எனக்கு நடந்தது எல்லாம் சரவணன் அண்ணனுக்கு நல்லா தெரியும். ஆசையாக தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமானதாக ஆக்க விரும்புகிறேன். எனக்கு மட்டுமே போதுமானதாக இருந்தால் இவ்வளவு பெரிய பெயரோ, புகழோ கடவுள் கொடுக்க வேண்டியது கிடையாது. உனக்கு மட்டும் பயன்படக் கூடாது அது அனைவருக்கும் பயன்படணும் என கடவுள் சொல்வதை ஒவ்வொரு படம் வெற்றி பெறும்போதும், சம்பளம் வாங்கும்போதும் நினைப்பேன்.

என்னால் முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த இடத்தை கொடுத்த திரையுலகிற்கு நான் ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதனால் தான் இந்த வகையான படங்கள் செய்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாக்கவோ, யாரையும் தாண்டிப் போகவோ, காலி செய்யவோ வரவில்லை. எனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையையும், வாய்ப்பையும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன அதுக்கு விட்டுடுங்களேன்.

இந்த மாதிரி திறமைசாலிகளுடன் சேர்ந்து படம் பண்ணும்போது நிறைய கற்றுக் கொள்கிறேன். நான் கதை கேட்டு தான் படம் பண்ணுகிறேன். இதுவரை ரீமேக் செய்தது இல்லை. என் படங்களின் வெற்றி, தோல்விக்கு நான் பொறுப்பு என்று நம்புகிறேன். எனக்கு நிறைய குறைகள் இருக்கிறது, மைனஸ் இருக்கிறது. அதை எல்லாம் பிளஸ்ஸாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே மக்கள் எனக்கு ஆதரவாக இருக்காங்க. திருச்சியில் இருந்து வந்த என்னை இங்கு கொண்டு வந்திருப்பது மக்கள் தான். இன்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு ஏதாவது தடைகளை போட்டுக் கொண்டே உள்ளனர். அதை தாண்டி வர நான் தயார். ஆனால் அந்த தடைகளை நீக்கினால் இன்னும் நான்கு சிவகுமார் முருகேசனை நான் கண்டுபிடித்து அழைத்து வருவேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *