இன்றைய சூழலில் டிஜிட்டல் தள ஊடகங்கள் சமூக பிரச்சனைகளை பற்றியும், உளவியல் சார்ந்த நுட்பமான சிக்கல்களையும் எளிமையாகவும் நிறைவாகவும் விவரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து, பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிட்டில் வின்ஸ்’ எனும் குறும்படம் – கடந்த ஆண்டுகளில் இந்த உலகம் எதிர்கொண்ட தொற்று பாதிப்புகளால் எதிர்கொண்ட உளவியல் சிக்கலை – விளிம்பு நிலை மனிதனின் நிராசையுடனான மரணத்தை பற்றி உணர்வுபூர்வமாக விவரித்து கவனத்தை கவர்ந்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவான ‘லிட்டில்விங்ஸ்’ எனும் குறும்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது. இந்த குறும்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தமிழ் சினிமாவின் தரமான படைப்புகளை வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் யூடியூப் தளத்தில் வெளியாகிறது. இதனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சென்னையில் பிரத்தியேக நிகழ்வு ஒன்றை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு – இணை தயாரிப்பாளர் இயக்குநர் ராஜு முருகன்- இயக்குநர் நவீன் உள்ளிட்ட படக் குழுவினர் பங்கு பற்றினர்.
குறும்படத்தை பற்றி இயக்குநர் நவீன் பேசுகையில், ” கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் ஆசைகளுடனே மரணத்தை தழுவினர். இதன் தாக்கத்தால் எழுதப்பட்ட கதை இது. மலைப்பகுதியில் வசித்து வரும் விளிம்பு நிலை மனிதர் சுவையான விருப்பத்திற்குரிய உணவை ஒரு முறை சுவைக்க விரும்புகிறார். அது அவருக்கு நனவானதா? கனவானதா? என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைத்திருந்தேன். குறைவான நிமிடங்களில் கதை சொல்ல வேண்டும்… அதனை அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பார்வையாளர்களை சென்றடையச் செய்ய வேண்டும்… படைப்பாளியாகவும் கவனம் ஈர்க்க வேண்டும்… என பல கோணங்களில் இதனை உருவாக்கினேன். இதற்காக தொழில்நுட்பக் குழுவினர் பேருதவி புரிந்தனர். தயாரிப்பாளர் பிரபு மற்றும் பிரகாஷ் பாபு ஆகியோர் இந்த குறும்படத்தை பார்வையிட்டு , பாராட்டியதுடன் அவர்களுடைய யூடியூப் தளத்தில் வெளியிடவுள்ளனர். இது அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

