காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவிப்பு; அரசாங்கம் ஒருவாரம் காலவகாசம் கோரியுள்ளது

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீகக் காணிகளை சுவீகரிப்பதற்காக அரசினால் 3ம் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் உள்நோக்கம் என்னவென்று  இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் ஒருவாரம் காலவகாசம் கோரியுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று(08) தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற குழுத் தலைவர் எஸ். சிறிதரன் 27/2  கீழ் இல் முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இந்த கால அவகாசத்தை கோரினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தொடர்ந்து உரையாற்றியதாவது,

வடக்கு , கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இப்போதும் இராணுவ முகாம்கள் உள்ளன. இராணுவ வசமே பெரும்பாலான காணிகள்  உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பகுதிகளில் மக்கள் இப்போதும் அகதிகளாக தனியார் வீடுகளிலும் முகாம்களிலும் வாழ்கின்றார்கள்.

அவர்களின் சொந்த நிலங்களில் குறிப்பாக பலாலியில் கூட தமது சொந்த நிலங்களில் வாழ முடியாதவாறு 3000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த மக்கள் வெவ்வேறு இடங்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள்.

கிளிநொச்சி நகரப்பகுதியில் கிட்டத்தட்ட 41 சதவீதமான காணிகள்  இராணுவத்திடமே  உள்ளன. 1956 இலிருந்து 1970வரை அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 26000வரை தமிழ் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இவ்வாறு தமது சொந்தக் காணிகள், நிலங்களை விட்டு அகதிகளாக முகாம்களில் மக்கள் வாழும் நிலையில் நான் கமத்தொழில், கால்நடை   மற்றும் காணி அமைச்சர் லால்காந்தவிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை சுவீகரிப்பதற்காக 3ம் மாதம் 28 ஆம் திகதி 24/30 ஆம் இலக்க வர்த்தமானி முன்னறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள  காணிகள் என்ன தேவைக்காக கோரப்பட்டுள்ளன என்பதையும் 5700 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாக சுவீகரிக்க காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்த சபைக்கு அறிவிப்பாரா?

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழும் நிலையில் அவர்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் உள்நோக்கம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால யுத்தம் காரணமாக அவர்களின் காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோரமுடியும் என்பதனை  அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிப்பாரா? எனக்கேட்டார்.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒரு வார கால அவகாசம் கோருவதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *